8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
பொம்மிடி,
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யப்படுகிறது. விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
இதற்காக 113 விவசாயிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தபால் அனுப்பப்பட்டது. ஆனால் இதை பல விவசாயிகள் வாங்க மறுத்து விட்டனர். சில விவசாயிகள் நேற்று ஆஜராகினர். அப்போது அதிகாரிகளிடம், விவசாயிகள் நிலம் தர மறுத்து தங்களது கருத்தை தெரிவித்தனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) முகுந்தன், தாசில்தார்கள் ரவிச்சந்திரன், சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.