போளூரில் வாகனம் மோதி பிளஸ்-1 மாணவன் பலி
போளூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
போளூர்,
போளூர் பத்மாபாய் தெருவை சேர்ந்தவர் மகேஷ். பால் வியாபாரி. இவரது மகன் சுரேந்தர் (வயது 16). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு டியூசனுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். டியூசன் முடிந்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பும்போது பெட்ரோல் போடுவதற்காக சி.சி.ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு காலை 6.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேந்தர் மீது மோதியது. மோதிய வேகத்தில் சுரேந்தரை சிறிதுதூரம் இழுத்து சென்றது. இதில் சுரேந்தர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை மகேஷ் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மோதிய வாகனம் எது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.