வானவில் : கையடக்கமான பிரிண்டர்
பிரிண்டர்கள் என்றாலே பார்ப்பதற்கு அளவில் பெரியதாகவும், இடத்தை அதிக அளவில் ஆக்கிரமித்துக் கொண்டும் இருந்ததெல்லாம் அந்தக் காலம்.
இப்போது வீடுகளுக்கு தேவையான சிறிய அளவிலான பிரிண்டர்கள் கூட சந்தைக்கு வந்து விட்டன. இப்போது மெமோ பேர்டு என்ற பெயரில் கையடக்கமான பிரிண்டர் அறிமுகமாகியுள்ளது. பார்ப்பதற்கு அழகிய பொம்மையைப் போன்ற தோற்றத்துடன் மூன்று அழகிய வண்ணங்களில் இது வந்துள்ளது. இஸட். டி. அகாடமி என்ற நிறுவனம் இந்த பிரிண்டரை வடிவமைத்துள்ளது.
இதன் விலை 48 டாலராகும் (சுமார் ரூ.3,700). தெர்மல் தொழில்நுட்பத்தில் இது செயல்படக் கூடியது. இதனால் இதற்கு அதிக செலவு பிடிக்கக்கூடிய இங்க்ஜெட் கேட்ரிஜஸ் தேவையில்லை. இதற்கென தெர்மல் காகிதங்கள் இருந்தால் போதுமானது. வண்ண காகிதங்களிலும் பிரிண்ட் எடுக்கலாம். இதற்கென வண்ண காகித ரோல்களும் விற்பனைக்கு வந்துள்ளன. உங்கள் ஸ்மார்ட்போனுடன் வை-பை மூலம் இந்த பிரிண்டரை இணைத்துவிட்டால் போதும். ஸ்மார்ட்போனிலிருந்து மட்டுமின்றி உங்கள் டேப்லெட், லேப்டாப் மூலமும் இதில் பிரிண்ட் எடுக்கலாம்.