மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை கண்டறிந்த உளவுத்துறை துணை ராணுவத்தினர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன்? சிவசேனா கேள்வி

மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை கண்டறிந்த உளவுத்துறை துணை ராணுவத்தினர் மீதான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-02-19 22:16 GMT
மும்பை,

பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்து வரும் சிவசேனா, அக்கட்சியையும், பிரதமர் மோடியையும் கடும் விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. மேலும் அடுத்து வரும் தேர்தல்களில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்றும் சிவசேனா திட்டவட்டமாக அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை வந்த பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணியை உறுதி செய்தார். மீண்டும் ஏற்பட்ட உறவு காரணமாக பா.ஜனதாவை விமர்சிப்பதை சிவசேனா நிறுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கம் மீண்டும் பா.ஜனதாவை தாக்கியே வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிய அளவிலான போரில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சிறிது காலம் முன்பு தகவல்கள் கசிந்தன. ஆட்சியில் இருப்பவர்கள் அந்த கூற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒருபோதும் நடந்துகொள்ள கூடாது.

நாடு பயங்கரவாத தாக்குதலால் கொதித்து போயுள்ளது, எனவே சில விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் கலவரம் மற்றும் பயங்கரவாத தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த கூடாது.

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலுக்கான விலையை காங்கிரஸ் இன்னும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

மேலும் புலவாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து, பா.ஜனதா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டி.வி. நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மறுபுறம் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் நேபால் சிங், ராணுவ வீரர்கள் குறித்து தவறான கருத்து கூறினார். ஆனால் அதை பா.ஜனதா புறக்கணித்து விட்டது. அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இ-மெயில் கண்டறிந்த வல்லமை கொண்ட நமது உளவு துறை, துணை ராணுவத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் தோல்வி அடைந்தது ஏன்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்