வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதிகாரியை நோக்கி செருப்பை காட்டிய கவுன்சிலர், 20 ஏஜெண்டுகள் மீது வழக்கு

சிவமொக்கா டவுனில், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதிகாரியை நோக்கி செருப்பை காட்டி மிரட்டிய கவுன்சிலர் மற்றும் 20 ஏஜெண்டுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-19 21:30 GMT
சிவமொக்கா,

சிவமொக்கா டவுனில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி கவுன்சிலர் விஸ்வாஸ் நேரடியாகவே குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கவுன்சிலர் விஸ்வாஸ் மற்றும் 20 ஏஜெண்டுகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரி சீனிவாசய்யாவை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவரை நோக்கி செருப்புகளை காண்பித்து அடித்து, உதைத்து விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி சீனிவாசய்யா, அங்கிருந்த ஊழியர்களை அழைத்து, கவுன்சிலர் மற்றும் ஏஜெண்டுகளை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள், கவுன்சிலர் விஸ்வாஸ் மற்றும் அவருடன் இருந்த ஏஜெண்டுகள் 20 பேரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வட்டார போக்கு வரத்து அவலுலகத்தில் இருந்து கவுன்சிலர் விஸ்வாஸ் மற்றும் ஏஜெண்டுகளை வெளியேற்றினர். மேலும், கவுன்சிலர் விஸ்வாஸ் மற்றும் 20 ஏஜெண்டுகள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்