2009-ம் ஆண்டு நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-02-19 23:00 GMT
சென்னை,

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2009-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி ஐகோர்ட்டுக்கு வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வக்கீல்கள் சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயன்றபோது, ஐகோர்ட்டில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின் போது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில், நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் காயமடைந்தனர். மேலும், கோர்ட்டு அறையில் உள்ள பொருட்களும், வளாகத்தில் நின்ற நீதிபதிகள், வக்கீல்களின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கருப்புதினம்

இந்த தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந் தேதி கருப்பு தினமாக வக்கீல்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று கருப்பு தினமாக கடைபிடித்தனர். ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில், துணைத்தலைவர் ஆர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் ஐகோர்ட்டு முன்பு ஒன்று கூடினர். பின்னர் போலீசாரை கண்டித்து கோஷங்கள் போட்டபடி, ஊர்வலம் சென்றனர்.

நடவடிக்கை

பின்னர் ஐகோர்ட்டு முன்புள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில், வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடியடி நடத்தியதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோஷம் போட்டனர்.

மேலும் செய்திகள்