நாய் குட்டிகளை காணவில்லை என்று கூறி கணவன்-மனைவி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு

நாய் குட்டிகளை காணவில்லை என்று கூறி கணவன்-மனைவி உள்பட 3 பேர் போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-18 22:35 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஸ் (வயது 32). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (73) என்பவரின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து சதீஸ் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்து சென்று விட்டார். ஆனால் அவர் வளர்த்து வந்த 2 நாய் குட்டிகளை மட்டும் அதே வீட்டில் விட்டு சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையில் வீட்டை காலி செய்த பிறகு அங்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் புருஷோத்தமன் (32) உள்பட 2 பேர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் அந்த வீட்டிற்கு சென்ற 2 பேர் போலீசார் என்று கூறி புருஷோத்தமனையும், அவருடன் தங்கி இருந்தவரையும் தாக்கியதாகவும், நாய் குட்டிகளையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாய் குட்டிகள் அங்கிருந்து காணாமல் போய் விட்டன. புருஷோத்தமன் இது குறித்து சதீசிடம் கூறியுள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து நேற்று மாலை சதீஸ், அவருடைய மனைவி புளோரைன்(26), புருஷோத்தமன் ஆகியோர் கையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் திடீரென போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அந்த பாட்டிலை அவர்களிடம் இருந்து பிடுங்கியதுடன் அவர்களை தடுத்தனர்.

இதையடுத்து 3 பேரும், நாய் குட்டிகளை காணவில்லை என்றும், அதை கண்டுபிடித்து தருமாறு கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். திருப்பூரில் நாய் குட்டிகளை காணவில்லை என்று கூறி கணவன்-மனைவி உள்பட 3 பேர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்