உடுமலை அருகே வனவிலங்குகளின் மேய்ச்சல் நிலமான அமராவதி அணை
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வனவிலங்குகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.;
தளி,
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் மழைப்பொழிவின் தாக்கம் குறைந்து விட்டதால் கடந்த சில மாதங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மீண்டும் வறட்சி நிலவியது. இதன் காரணமாக அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து விட்டது.
இதனால் அணைக்கு குறைந்தளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையின் நீர்்இருப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் பெரும்பாலான பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்து வந்தது. இந்த சூழலில் அணையின் நீர்மட்டம் குறைந்த பகுதியில் தற்போது புற்கள் மற்றும் செடிகள் வளர்ந்து பசுமை போர்த்திய புல்வெளியாக காட்சி அளித்து வருகிறது.
வன விலங்குகள் முகாம்
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமராவதி அணைக்கு வந்து முகாமிட்டு வருகின்றன.
உணவுக்காக மதிய வேளையில் வனப்பகுதியில் இருந்து பயணத்தை தொடங்கும் வனவிலங்குகள் நீண்ட தூரம் பயணம் செய்து மாலையில் அணையை வந்தடைகிறது. அதன் பின்னர் அணைப்பகுதியில் வளர்ந்துள்ள புற்களை சாப்பிட்டு, தண்ணீரை குடித்து விட்டு அங்கேயே இளைப்பாறுகின்றன. இதனால் வன விலங்குகளின் மேய்ச்சல் நிலமாக அமராவதி அணை மாறிப்போனது.
அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் வனவிலங்குகள் அணையை விட்டு வெளியேறி உடுமலை - மூணாறு சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. ஆனால் மான், காட்டுபன்றி உள்ளிட்ட தாவர வகை வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்லாமல் அணைப்பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் அமராவதிஅணை வன விலங்குகள் மயமாக காட்சி அளித்து வருகிறது.