மிளகாய் விவசாயம் பாதிப்பு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் விவசாயம் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

Update: 2019-02-18 22:12 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பணப்பயிராக விளங்குவது மிளகாய். எனவே நெல்லுக்கு அடுத்தபடியாக மாவட்டம் முழுவதும் மிளகாய் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய முண்டு மிளகாய் அதிக காரத்தன்மையுடன் இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் இங்கு வந்து அதிக விலைக்கு மிளகாயை கொள்முதல் செய்வது வழக்கம். மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைப்பதால் நெல் விவசாயம் பொய்த்தாலும் விவசாயிகளுக்கு மிளகாய் சாகுபடி ஆறுதலை அளித்து வந்தது.

இந்த பருவத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. முதலில் நல்ல மழை பெய்ததால் மிளகாய் செழிப்பாக வளர்ந்தது. அறுவடையின்போது மழையில்லாததால் மிளகாய் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்பட்டது. ஒரு சில விவசாயிகள் நிலத்தடி நீர் மற்றும் டேங்கர் தண்ணீரை கொண்டு மிளகாய் பயிரினை காப்பாற்றி உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் வசதியில்லாததால் மிளகாய் பயிரினை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் மகசூல் பெருமளவு குறைந்து விட்டது. விளைந்த மிளகாயும் அளவிலும், தரத்திலும் குறைவாக உள்ளன. இதனால் சந்தையில் போதிய விலை கிடைக்கவில்லை. முதல் தர மிளகாய் 10 கிலோ ரூ.1000–த்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ரூ.300–க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கும், விரக்திக்கும் ஆளாகியுள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் கூறும் போது, மிளகாய்க்கு இது தான் பருவம். வறட்சியால் மிளகாய் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. நெல் விவசாயத்தை போலவே மிளகாய் விவசாயமும் பாதித்துவிட்டது. பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்க்கு பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் மிளகாய்க்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசுக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் உள்ள ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் மிளகாய் பயிருக்கு இழப்பீடு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்