நண்பரிடம் ரூ.9 லட்சம் திருடிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகன் கைது

நண்பரிடம் ரூ.9லட்சத்தை திருடிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-18 21:52 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த சமித் கரண்டே என்ற வாலிபர் பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக தனது நண்பர் ஸ்ரீகாந்த் நிம்பல்கர்(வயது22) உள்பட 2 பேருடன் சயான் பகுதிக்கு காரில் வந்திருந்தார். அங்கு வந்ததும் ஸ்ரீகாந்த் நிம்பல்கர் அவசர வேலை காரணமாக வெளியில் செல்ல வேண்டி இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், மற்ற இருவரும் கார் வாங்குவது குறித்து பேசி முடித்து, காரில் இருந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக வந்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் இருந்த ரூ.9 லட்சம் மாயமாகி இருந்தது.

கைது

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சமித் கரண்டே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஸ்ரீகாந்த் நிம்பல்கர் தான் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. தான் திருடிய பணத்தில் ரூ.1 லட்சத்தை செலவழித்து விட்டதாக தெரிவித்த ஸ்ரீகாந்த் நிம்பல்கர் மீதி பணம் வீட்டில் இருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்