சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்குகிறது பெங்களூருவில் விமான சாகச ஒத்திகை
சர்வதேச விமான கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கவுள்ள நிலையில் பெங்களூருவில் விமான சாகச ஒத்திகை நடந்தது.
பெங்களூரு,
பிரான்சு நாட்டை சேர்ந்த ‘டசால்ட்’ விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் எரிக் டிராப்பியர் பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வணிக விமானமும்...
ரபேல் போர் விமானம் பெங்களூரு விமான கண்காட்சியில் வைக்கப்படுகிறது. அத்துடன் ‘டசால்ட் பால்கான் 2000எஸ்’ வகையை சேர்ந்த வணிக விமானமும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
இந்த வணிக விமானத்திற்கு இ.ஏ.எஸ்.ஏ. மற்றும் எப்.ஏ.ஏ. அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது 100 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள பகுதியை பார்க்கும் வசதி கொண்ட விமானம் ஆகும். இந்த நவீன பால்கான் தொழில்நுட்ப வசதி கொண்டது.
மோசமான வானிலையிலும்...
நாக்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பால்கான் 2000 விமானமும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. இந்தியாவின் ராணுவத்திற்கு தேவையான சிறப்பான, திறன் மிகுந்த, நவீன வசதிகள் கொண்ட போர் விமானங்களை தயாரித்து வழங்குகிறோம்.
இந்த வணிக விமானம் 2 என்ஜின்களை கொண்டது. இதை இயக்குவதற்கான செலவு குறைவு ஆகும். மோசமான வானிலையிலும் விமான நிலையங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் வசதி இதில் உள்ளது. அதன் பறக்கும் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான சாகச ஒத்திகை
நாக்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த பால்கான் 2000 விமானம், இறுதி வடிவமைப்புக்காக பிரான்சுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த வகையான விமானங்களை கையாள கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் எங்கள் நிறுவனம் முக்கிய பங்காற்றும்.
இவ்வாறு எரிக் டிராப்பியர் கூறினார்.
இதற்கிடையே சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக எலகங்கா விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்பதிவு செய்து...
இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. இந்த கண்காட்சி நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகின்றன. காலை மற்றும் மாலை தினமும் விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கட்டணத்தை செலுத்தி அதற்குரிய அனுமதி சீட்டை பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.