மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு, செல்போனில் கொலை மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-02-18 21:29 GMT
மங்களூரு, 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபையில் திறன் மேம்பாட்டு துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடகத்தை சேர்ந்த இவர் உத்தர கன்னடா தொகுதி எம்.பி. ஆவார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் அமைப்பை மாற்ற தான் நாங்கள்(பா.ஜனதா) ஆட்சிக்கு வந்து உள்ளோம் என்று சர்ச்சைக்கு உரிய கருத்தை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்து பெண்கள் மீது கையை வைப்பவர்களை வெட்ட வேண்டும் என்று கூறிய அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இத்தாலி கலப்பினம் என்று கூறி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார். அவரது சர்ச்சை கருத்துகளுக்கு பா.ஜனதாவினரே எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சிர்சியில் உள்ள அனந்தகுமார் ஹெக்டேவின் வீ்ட்டின் தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை அனந்தகுமார் ஹெக்டேவின் மனைவி எடுத்து பேசி உள்ளார். அப்போது எதிர்முனையில் ேபசிய மர்மநபர் இந்தியில் பேசி உள்ளார். இதனையடுத்து அனந்தகுமார் ஹெக்டேவின் மனைவி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனை தொடர்ந்து அனந்தகுமார் ஹெக்டேவின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. அதை அவர் எடுத்து பேசி உள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், "நீ பெரிய அரசியல் தலைவர். ஆனால் சில தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுகிறாய். அதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசுவோம்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக அவரது உதவியாளர் சுரேஷ் கோவிந்த் ெஷட்டி சிர்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்மநபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்