நாமகிரிப்பேட்டை அருகே சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து விவசாயியை கொன்ற தம்பி கைது

நாமகிரிப்பேட்டை அருகே, சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-02-18 21:30 GMT
நாமகிரிப்பேட்டை,

இதுபற்றி போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி மணியக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வரதராஜ் (வயது 51). விவசாயி. திருமணம் ஆகாதவர். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 16-ந் தேதி வரதராஜ் வீட்டில் படுத்து இருந்தார். நேற்று முன்தினம் காலையில் அவருடைய தோட்டத்தில் வேலை செய்யும் ஆறுமுகம் என்பவர் வரதராஜ் வீட்டுக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வரதராஜ் அங்கு இல்லை. ஆனால் வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறை காணப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் அங்கு வந்து, வரதராஜ் எங்கே? வீட்டில் ரத்தக்கறை ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது அங்கும், இங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது வரதராஜ் பிணமா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் வரதராஜிக்கும், அவரது தம்பி விஜயகுமாருக்கும் (47) சொத்து தகராறு இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விஜயகுமார் மற்றும் 7 பேர் சேர்ந்து வரதராஜை வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததும், பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி ஓடைக்கரையில் அவரது உடலை புதைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்கோடி மற்றும் போலீசார் வாழப்பாடி பகுதிக்கு சென்று, தாசில்தார் வள்ளிதேவி முன்னிலையில், பிணத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் கொலையுண்ட வரதராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகுமாருக்கு உடந்தையாக இருந்த 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வரதராஜிக்கு சொத்துக்களும், நிலங்களும் அதிகளவில் இருந்துள்ளது. ஆனால் அவருக்கு வாரிசு இல்லை. இதனால் விஜயகுமார் அண்ணனின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வரதராஜின் உடல் புதைக்கப்பட்ட பொன்னாரம்பட்டி பகுதியில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் உடலை புதைக்க அவர்கள் உதவினார்களா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சொத்து தகராறில் அண்ணனை, தம்பியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்