புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு, கூடலூரில் தொழிலாளர்கள் மனித சங்கிலி

புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-18 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வருவாய் அல்லது வனத்துறைக்கு என முடிவு செய்யப்படாத செக்‌ஷன்-17 நிலம் உள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கூடலூரில் உள்ள செக்‌ஷன்-17 நிலத்தில் 17 ஆயிரம் ஏக்கரை காப்புக்காடு என வரையறுக்கப்படும் செக்‌ஷன்-16ஏ என்ற புதிய சட்ட மசோதாவுக்குள் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதா தமிழக கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த புதிய சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த புதிய சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சட்ட மசோதாவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் புதிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் பகுதியில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., பி.எல்.ஓ. உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கே.பி.முகமது, பாலகிருஷ்ணன், கோஷிபேபி, பாண்டியராஜ், முருகையா, செல்வரத்தினம், பாபு உள்பட தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையோரம் தோட்ட தொழிலாளர்கள் வரிசையாக நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதனால் கூடலூர் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதேபோல் தேவர்சோலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி சுரேஷ் தலைமை தாங்கினார். கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையோரம் ஏராளமானவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பந்தலூர் பழைய பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் எல்.பி.எப். பொதுச்செயலாளர் மாடசாமி, நிர்வாகி நாகேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி முத்துக்குமார் உள்பட நூற்றுக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சேரம்பாடி, பிதிர்காடு பஜார்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, புதிய சட்ட மசோதாவால் கூடலூர் பகுதி காப்புக்காடாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகளின் நிலங்கள் வனப்பகுதியாக மாறும் நிலை உள்ளது. மேலும் தோட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

இற்கிடையில் புதிய சட்ட மசோதாவை எதிர்த்து கூடலூர் தொகுதி முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்