டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கி சூடு: கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு ஐ.ஜி. பாராட்டு
அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடித்த போலீசாருக்கு போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா பாராட்டு தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகரஜோதி(வயது 44). சிக்கலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு கடையில் வசூலான ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துடன் மோட்டார் சைக்கிளில் நரிப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் மகரஜோதியின் கையில் துப்பாக்கியால் சுட்டு அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது.
இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்ற கொள்ளை சம்பவங்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்று உள்ளன. அந்த சம்பவங்களின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிக்கிய கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன்(32), பரதன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.80 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள், 3 தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் ஆகியோர் நேற்று அரூர் போலீஸ் நிலையத்தில் இந்த துப்பாக்கி சூடு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை வாகன சோதனை மூலம் விரைவாக பிடித்த தனிப்படை போலீஸ் ஏட்டு செந்தில், ஊர்க்காவல்படை வீரர் வடிவேல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசாருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.