சம்பள நிலுவைத்தொகையை பெற்றுத்தர ஆசிரியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது
திருச்செங்கோட்டில், சம்பள நிலுவைத்தொகையை பெற்றுத்தர ஆசிரியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையடிவாரத்தில் அரசு உதவி பெறும் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சந்திரசேகர் என்பவருக்கு 7 மாதமாக சம்பள நிலுவைத்தொகை ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 38 இருந்துள்ளது.
இதை பெற்றுத்தருவதற்கு வட்டார கல்வி அலுவலருக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ரூ.5 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்ட சந்திரசேகர், ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
இதையடுத்து அவர்களது ஆலோசனைப்படி ஆசிரியர் சந்திரசேகர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தலைமை ஆசிரியர் செந்தில்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.