சேலம் சரகத்தில் 12 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இடமாற்றம்
சேலம் சரகத்தில் 12 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரவணன், சேலம் மாவட்டம் ஓமலூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஓமலூரில் பணியாற்றிய பாஸ்கரன் கிருஷ்ணகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பணியாற்றிய தங்கவேல், ஊட்டிக்கும், அங்கு பணியாற்றி வந்த திருமேனி, சேலம் தெற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். இங்கு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி, தர்மபுரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.
தர்மபுரியில் பணியாற்றி வந்த காந்தி, நாமக்கல்லுக்கு மாற்றப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு ராஜு, சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆத்தூரில் பணியாற்றி வந்த பொன்கார்த்திக்குமார், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு மாற்றப்பட்டார்.
நாமக்கல் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு மாற்றப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த கண்ணன், கோவை உதவி கமிஷனராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ராஜகாளஸ்வரன், கோவை போலீஸ் கட்டுப்பாட்டு உதவி கமிஷனராகவும், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ராமு, ஈரோட்டிற்கும், சேலம் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் பணியாற்றிய ராஜரணவீரன் கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சேலம் சரகத்தில் மட்டும் 12 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 89 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.