கணியம்பாடி அருகே காளை விடும் திருவிழா

வேலூர் கணியம்பாடி அருகே காளை விடும் திருவிழா நடைபெற்றது.

Update: 2019-02-18 22:30 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் கணியம்பாடியை அடுத்த நாகநதி கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளை விடும் திருவிழாவையொட்டி, காளைகள் ஓடும் பாதையில் மணல் கொட்டப்பட்டு, பார்வையாளர்கள் வசதிக்கேற்ப இருபுறமும் தடுப்பு வேலிகள் போடப்பட்டு இருந்தன. போட்டியில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

போட்டியின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேலூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியதில் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராகவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மாணிக்கம், ஊர் நாட்டாண்மை ஜோதி, முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.65 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.55 ஆயிரம் என காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 101 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்