கோயம்பேடு மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை யார் அவர்? போலீஸ் விசாரணை

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-02-18 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்களுக்கு என தனித்தனியாக மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு பூ மார்க்கெட்டில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஊழியர்கள் சிலர், அந்த வழியாக நடந்துசென்றபோது, அங்குள்ள ஒரு பூக்கடை வாசலில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் மாதேஷ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான இளம்பெண் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரம் தெரியவில்லை. அவர் சுடிதார் அணிந்து இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண், குடிபோதையில் இருந்த ஆண் ஒருவருடன் அந்த பகுதியில் உள்ள கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டு உள்ளார். அப்போது பிரியாணியில் இறைச்சி துண்டுகள் இல்லை என்று கூறி அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் இருந்த நபர் ஓடிவிட்டார். தாங்கள் போதையில் இருந்ததால் அவர்கள் தகராறில் ஈடுபட்ட சத்தம் மட்டும் கேட்டது, எழுந்து பார்ப்பதற்குள் அந்த நபர் ஓடிவிட்டதால் அவரது முகத்தை பார்க்கவில்லை என நள்ளிரவில் அங்கு போதையில் தூங்கிய தொழிலாளர்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இளம்பெண்ணுடன் வந்த மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின்பேரில் சம்பவம் நடந்த இடத்தில் போதையில் படுத்திருந்த கூலி தொழிலாளிகள், டிரைவர்கள் சிலரையும் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

பிரியாணி சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்