விழுப்புரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.
விழுப்புரம்,
நாடு முழுவதும் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும், 1.1.2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், 2-வது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சுமார் 400 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒன்றிரண்டு உயர் அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் சில அலுவலகங்கள் பூட்டிக்கிடந்ததை காண முடிந்தது.
மேலும் விழுப்புரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் நிர்மல்குமார், திருவேங்கடம், ஊழியர் சங்க நிர்வாகிகள் தேவர், அகஸ்டின், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதை பழுதுபார்க்கும் பணி, பொதுமக்கள் கட்டணம் செலுத்தும் பணி, ‘சிம்கார்டு’ வினியோகம் செய்யும் பணி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.