இலவச பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
இலவச பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.
சேலம்,
சேலம் சீலநாயக்கன்பட்டி, எருமாபாளையம், ரெட்டியூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்கள், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட முயன்றனர். அவர்களை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்றும், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரை மட்டும் மனு அளிக்க போலீசார் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைவரும் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு 5 ஆண்டுகள் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்தாலே அவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு இலவசபட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.