சேலத்தில் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் கமிஷனர் பேச்சு

சேலத்தில் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் கூறினார்.;

Update: 2019-02-18 23:00 GMT
சேலம், 

சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், கொலை, கொள்ளை, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எளிதில் பிடிக்கும் வகையிலும் காவல்துறை சார்பில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், குற்றங்கள் இல்லாத நகரமாக சேலத்தை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் சேலம் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி மற்றும் கிச்சிப்பாளையம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் 444 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அன்னதானப்பட்டியில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு புதிதாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது போலீஸ் கமிஷனர் சங்கர் பேசியதாவது:-

தமிழக அரசு 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சேலம் மாநகருக்கு தான் சுமார் 200 கண்காணிப்பு கேமராக்களை வழங்கியது. சேலம் மாநகரில் பொதுமக்களின் பங்களிப்பு மிக நன்றாக உள்ளது. குற்றங்களை தடுப்பதற்கு ஒவ்வொரு தெருவிலும், மெயின்ரோட்டிலும் இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் அமைக்கும் கேமராக்களில் ஒன்றை மட்டும் சாலையை பார்க்கும்படி அமைத்தால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும். கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல குற்றங்களை கண்டுபிடிக்க முடியும்.

வளர்ந்த நாடுகளில் போக்குவரத்தை சரி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே உள்ளது. ரோந்து வாகனம் மட்டும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதற்கான காரணம் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு மட்டுமே தவிர, குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்று கூறுவது சரியல்ல.

சேலம் மாநகரில் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது குற்ற செயல்கள் குறைந்திருக்கிறது. மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை பொதுமக்கள் நன்றாக தெரிந்து கொண்டு அதை தங்களது பகுதிகளில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர்கள் பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன், சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு பங்களிப்பு செய்த பொதுமக்களுக்கு சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்