வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 50 பேரிடம் ரூ.22 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 பேரிடம் இருந்து ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 பேரிடம் இருந்து ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
மும்பை கோரேகாவ் ஆரேகாலனியை சேர்ந்தவர் ராம்பிரதாப் சிங். அங்கு இவரும், அவரது தோழி வந்தனா என்பவரும் சேர்ந்து வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நவ்சாத் என்பவருக்கு ராம்பிரதாப் சிங், வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும் அதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கினார்.
இதன்பின்னர் அவருக்கு வெளிநாட்டு நிறுவனத்தின் பணி நியமன ஆணையை கொடுத்தார். அந்த சான்றிதழுடன் நவ்சாத் வெளிநாடு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்காமல் மும்பை திரும்பினார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் ராம்பிரதாப்சிங், வந்தனா இருவரும் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர்.
கைது
இதனால் அவர்கள் மீது நவ்சாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் 50 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வந்தனாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராம்பிரதாப் சிங்கை தேடி வந்தனர். இந்தநிலையில், அவர் மும்பையில் உள்ள ஓட்டலுக்கு வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.