கொள்ளையடிக்க சென்ற போது கூட்டாளியை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு

கொள்ளையடிக்க சென்றபோது, கூட்டாளியை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-02-17 23:15 GMT
தானே, 

கொள்ளையடிக்க சென்றபோது, கூட்டாளியை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கூட்டாளியுடன் தகராறு

தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி வங்கிக்கு சொந்தமான பணத்துடன் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக மும்பை போரிவிலியை சேர்ந்த சஞ்சய் பாட்டீல்(வயது36) என்பவர் தனது கூட்டாளி பிரதிப்குமார் என்பவருடன் காரில் பின்தொடர்ந்து சென்றார்.காரை பிரதிப்குமார் ஓட்டினார்.

அவர்களது கார் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்றது. இதனால் கோபம் அடைந்த சஞ்சய் பாட்டீல் காரை வேகமாக ஓட்டும்படி பிரதிப்குமாரை திட்டினார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு உண்டானது.

ஆயுள் தண்டனை

இதனால் கோபம் அடைந்த சஞ்சய் பாட்டீல் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரதிப்குமாரை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் பாட்டீலை கைது செய்தனர். அவர் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கொலை குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, குற்றவாளி சஞ்சய் பாட்டீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்