பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆய்வு மும்பை ஐகோர்ட்டில், ரிசர்வ் வங்கி தகவல்
பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆய்வு செய்து வருகிறோம் என இந்திய ரிசர்வ் வங்கி மும்பை ஐகோர்ட்டில் கூறியுள்ளது.
மும்பை,
பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆய்வு செய்து வருகிறோம் என இந்திய ரிசர்வ் வங்கி மும்பை ஐகோர்ட்டில் கூறியுள்ளது.
பார்வையற்றவர்கள் மனு
இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2 ஆயிரம், 500, 100, 200, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் இல்லை. இந்தநிலையில் இந்திய கண்பார்வையற்றவர்கள் சங்கத்தினர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், புதிய ரூபாய் நோட்டுகள் பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் இல்லை. எனவே அவர்கள் தொட்டு பார்த்து அடையாளம் காணும் வகையிலான ரூபாய் நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ஆய்வு செய்கிறோம்
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இதுகுறித்து பதில் அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பார்வையற்றவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான ரூபாய் நோட்டுகளை அச்சிடவே விரும்புகிறோம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுனர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம் என ஐகோர்ட்டில் கூறியுள்ளது.
இதையடுத்து ஐகோர்ட்டு இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. மேலும் வல்லுனர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.