கடலூர் மீனவர்கள் வலையில் 4 டன் எடையுள்ள 2 திருக்கை மீன்கள் சிக்கின

ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கடலூர் மீனவர்கள் வலையில் 4 டன் எடையுள்ள 2 திருக்கை மீன்கள் சிக்கின.

Update: 2019-02-17 22:45 GMT
கடலூர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 30 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது மீனவர்கள் ஆழ்கடலில் விரித்த வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியது. அதில் பெரிய அளவிலான 2 திருக்கை மீன்களும் சிக்கின.

இதையடுத்து மீனவர்கள் அந்த மீன்களை நேற்று கடலூர் துறைமுகத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். பின்னர் அந்த 2 பெரிய திருக்கை மீன்களை ஏலம் விடுவதற்காக தனித்தனியாக வைத்தனர். இதற்கிடையில் பெரிய அளவிலான அந்த திருக்கை மீன்களை துறைமுகத்துக்கு மீன் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தொடர்ந்து அந்த 2 திருக்கை மீன்களும் ஏலம் விடப்பட்டது. இதை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இறுதியில் கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர், 2 திருக்கை மீன்களையும் ரூ.92 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அந்த மீன்களில் உள்ள நெட்டி என்று சொல்லப்படும் ஒரு பகுதி மருந்து தயாரிக்க பயன்படுவதால் அதிக விலைக்கு போனதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதில் ஒரு திருக்கை மீன் 1½ டன் எடையும், மற்றொரு மீன் 2½ டன் எடையும் இருந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்