உளுந்தூர்பேட்டை அருகே, நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-02-17 22:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் அஜய் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் கமலேஷ்(7). களத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அஜய் 3-ம் வகுப்பும், கமலேஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க செல்வதாக அவர்களது பெற்றோரிடம் கூறி விட்டு நேற்று மாலை குளத்துக்கு சென்றனர். பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், அவர்களை தேடி குளத்துக்கு சென்றனர். அப்போது குளத்தின் கரையில் மாணவர்களின் ஆடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் மாணவர்களை காணவில்லை. இதனால் மாணவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாமோ என்று சந்தேகித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கிராம மக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மாணவர்கள் 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் குளிக்க சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்