சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றாமல் பெண் நோயாளியை அலைக்கழிப்பு செய்வதாக புகார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றாமல் பெண் நோயாளியை அலைக்கழிப்பு செய்வதாக புகார் தெரிவித்தனர்.
சேலம்,
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரை எழியன். இவரது மனைவி அமுதா (வயது 32). இவர், ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அமுதாவுக்கு ரத்த சோகை நோய் இருப்பதாகவும், இதனால் அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும் என்று அவரது கணவர் துரை எழியன் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அமுதா, ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, ஆஸ்பத்திரியில் செயல்படும் அரசு ரத்த வங்கியில் இருந்து அமுதாவுக்கு குறிப்பட்ட வகை ரத்தம் 3 யூனிட் செலுத்த வேண்டும் என்றால், அதற்கு மாற்றாக உறவினர்கள் யாராவது அதே 3 யூனிட் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் உள்ள நர்சுகள் கட்டாயப்படுத்தியதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து துரை எழியனின் உறவினர்கள் கூறுகையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமுதாவுக்கு குறிப்பிட்ட வகையான 3 யூனிட் ரத்தம் செலுத்த வேண்டும் என்றால், அதற்கு மாற்றாக யாராவது ரத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் வற்புறுத்தி அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை, என்றனர்.இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரனிடம் கேட்டபோது, நாங்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் ரத்தம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவது கிடையாது. ஆஸ்பத்திரியில் சேமித்து வைத்துள்ள ரத்தமானது, அவசர தேவைக்காக வைத்துள்ளோம் என்றார்.