பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெருமாநல்லூர் கல்லூரி மாணவர்
நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்தபோது பெருமாநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நெகமம்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அங்காளம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் சக்திவேலின் மனைவி பழனியம்மாள்(வயது 51). பனியன் நிறுவன தொழிலாளி. இவர்களின் மகன் இளங்கோவன்(23). மகள் நந்தினி(21). சக்திவேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இளங்கோவன் கருமத்தம்பட்டி அருகே அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன், கோவையைச் சேர்ந்த சுஸ்வந்த் (22), பரத் (23), அரசூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் (22) ஆகியோர் படித்து வருகிறார்கள். 4 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் இளங்கோவனின் நண்பன் பரத் நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதற்காக நண்பர்களுக்கு அவர் விருந்து கொடுக்க நினைத்தார். இதற்காக தனது நண்பர்கள் இளங்கோவன், சுஸ்வந்த், சுப்பிரமணியம் ஆகியோரை பல்லடம் அருகே ஆலமரத்து மேட்டில் உள்ள தனது அண்ணன் தோட்டத்திற்கு பரத் அழைத்து சென்றார்.
பின்னர் தனது வீட்டில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதற்கிடையில், தோட்டத்தின் அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது மாணவர் இளங்கோவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் மாணவன் சுழலில் சிக்கி தண்ணீரில் தத்தளித்துள்ளார். பின்னர் அவர் தண்ணீரில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை அறியாத மற்ற நண்பர்கள் 3 பேரும் இளங்கோவனை காணவில்லை என்று தேடி பார்த்தபோது அவர் கிடைக்கவில்லை.
உடனே அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பி.ஏ.பி. தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மாணவரை தேடினர். என்.சந்திராபுரத்தில் இருந்து பெரியபட்டி செல்லும் வாய்க்கால் முழுவதும் தேடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தற்போது கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் அந்த வாய்க்காலில் தேடி வந்தனர். இரவு நேரம் ஆகியதால் மாணவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற உள்ளது.