ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு 44 கிலோ கஞ்சா கடத்திய தொழிலாளி கைது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு 2 மூட்டைகளில் 44 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-17 22:30 GMT
வேலூர், 

ஆந்திர மாநிலத்தில் இருந்து காட்பாடி வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சித்தூர்-கடலூர் சாலை காட்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காட்பாடி ரெயில் நிலைய பஸ்நிறுத்தம் அருகே 2 மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு, பின் முரண்பாடான தகவல்களை தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டனர். அதில், ஒரு மூட்டையில் 22 கிலோ கஞ்சா என 2 மூட்டைகளில் 44 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தேனி மாவட்டம் போடி தாலுகா பி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் முத்துவீரன் (வயது 41) கூலித்தொழிலாளி என்பதும், போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும், அதற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி அதனை ரெயில் மூலம் காட்பாடிக்கு கடத்தி வந்ததும், அங்கிருந்து பஸ்சில் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து முத்துவீரன் மீது போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் முத்துவீரனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்