காஷ்மீர் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம்,
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்கள் உள்பட 40 பேர் பலியாகினர். தீவிரவாதிகளின் இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் சேலத்தில் பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று ராணுவ வீரர்களுக்கு சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் உதவி பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் அழகாபுரத்தில் உள்ள புனித மிக்கேல் ஆலயத்தில் பங்கு தந்தை சாலமோன்ராஜ் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, காஷ்மீரில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் பனங்காடு, சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக பனங்காடு பகுதியில் புறப்பட்டு கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.