ஆத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியானதால் ஆத்திரம்: தனியார் பஸ் தீ வைத்து எரிப்பு; பிணத்துடன் உறவினர்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தனியார் பஸ்சை தீ வைத்து எரித்தனர். பின்னர் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). விவசாய தொழிலாளி. இவர் நேற்று கருமந்துறை பஸ் நிலையத்துக்கு வந்தார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான கோவில் காட்டுப்பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சேலத்தில் இருந்து கருமந்துறை நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. மாலை 4 மணி அளவில் கருமந்துறை பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்ததும் விபத்தில் பலியானவரின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதை அறிந்த தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து ஓடி விட்டனர். விபத்து நடந்தவுடன் பஸ்சில் பயணம் செய்த பயணிகளும் அங்கிருந்து இறங்கி விட்டனர்.
பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளையராஜா இறந்து கிடப்பதை பார்த்த அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து பஸ் மீது கற்களை வீசினார்கள். பின்னர் ஒரு சிலர் கேன்களில் கொண்டு வந்த பெட்ரோலை பஸ் மீது ஊற்றி தீ வைத்தனர். இதனால் தனியார் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கருமந்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்களை தீயை அணைக்க விடாமல் உறவினர்கள் தடுத்தனர். பின்னர் வாழப்பாடி தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். தகவல் அறிந்து வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி, ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு திரண்டனர். பின்னர் போலீசார் உதவியுடன் தீயணைப்பு துறையினர் தீப்பிடித்த பஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போன்று காட்சியளித்தது.
அதன்பின்னர் ஆத்திரம் தீராத உறவினர்கள் விபத்தில் பலியான இளையராஜாவின் பிணத்தை நடுரோட்டில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரும், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புக்கரசியும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதன் பிறகு போலீசார் உறவினர்களிடம் இருந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் விரைந்து வந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். விபத்தில் பலியான இளையராஜாவுக்கு தனக்கொடி(30) என்ற மனைவியும், விக்னேஷ்(15) என்ற மகனும், இந்துஜா(13) என்ற மகளும் உள்ளனர்.
இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ் மீது கல் வீசியவர்கள் யார்? தீ வைத்தது யார்? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை கொண்டு சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.