குன்னூர் ஏல மையத்தில், 10 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனை

குன்னூர் ஏல மையத்தில் 10 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது.

Update: 2019-02-17 21:45 GMT
குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலம் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 14, 15-ந் தேதிகளில் நடந்த 7-வது ஏலத்துக்கு 12 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 7 லட்சத்து 70 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாவும், 5 லட்சத்து ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 9 லட்சத்து 96 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 79 சதவீத விற்பனை ஆகும்.

விற்பனையான தேயிலைத்தூளின் மதிப்பு ரூ.9 கோடியே 82 லட்சம். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.272, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.262 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.87 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.115 முதல் ரூ.127 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.89 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.125 முதல் ரூ.128 வரையும் விற்பனையானது.

இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.1 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அடுத்த ஏலம் வருகிற 21, 22-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 11 லட்சத்து 16 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது.

மேலும் செய்திகள்