40 துணை ராணுவ வீரர்கள் பலி: நாமக்கல், ராசிபுரத்தில் மவுன ஊர்வலம்

காஷ்மீரில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாமக்கல், ராசிபுரத்தில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.;

Update:2019-02-18 04:00 IST
நாமக்கல், 

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில், பலியான துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து பொதுநல அமைப்புகள் மற்றும் சேவை சங்கங்களின் சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை வழியாக மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பலியான துணை ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் பொதுநல அமைப்பினர், சேவை சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மட்டும் இன்றி சிறுவர், சிறுமிகளும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

ராசிபுரம் ரோட்டரி கிளப், அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆபரண தொழிலாளர்கள் சங்கம், ராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம், ஜேசீஸ் போன்ற அமைப்புகள் சார்பில் ராசிபுரத்தில் மவுன ஊர்வலம் நடந்தது. வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கடைவீதியில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கடைவீதியில் உள்ள அகர மகாலில் முடிவடைந்தது. அங்கு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் சிவக்குமார், ஆபரண தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் நீலவானத்து நிலவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், மாணவர் அணி துணை செயலாளர் மணிமாறன், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேகர், மாவட்ட கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ஆதிதமிழன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் காமராஜ், ராசிபுரம் நகர துணை செயலாளர்கள் பிரபு, சுகுவளவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கதிர்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராசிபுரம் நகர இளைஞர்கள் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. வீரர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. இதில் கோபி, நவீன், மணி, வெங்கட், அன்பழகன், விக்னேஷ், கோகுல், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் மற்றும் ராசிபுரம் நகர இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொதுமக்கள் மற்றும் போலீசார் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்