திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் கின்னஸ் சாதனையாக பதிவு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் நடந்தது. இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.;

Update: 2019-02-17 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் 9–ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் ஆலோசனைக்குழு தலைவர் எஸ்.கார்த்திகேயன், கவுரவ தலைவர் ஆர்.ஸ்ரீதரன், தியாகராஜர் கோவில் செயல் அதிகாரி கோ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ.கனகராஜன் வரவேற்றார்.

விழாவையொட்டி நடன கலைஞர்கள் 1,000 பேர் பங்கேற்ற பரதநாட்டியம் நடந்தது. இதை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து நடன கலைஞர்கள் ஆயிரம் பேர், சிவபுராணத்தின் பொருளை உணர்த்தும் பாடலுக்கு 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியமாடினர். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக அமைச்சர் காமராஜ் பேசியதாவது:–


விவேகானந்தர் ஆன்மிகத்தை உலக நாடுகளில் பரவ செய்தார். இதன் மூலம் ஆன்மிகம் வளர்ச்சி அடைந்தது. மனிதனை நல்வழிப்படுத்தும் ஆன்மிகம் வளர வேண்டும். பிறக்க முக்தி அளிக்கும் மண்ணாக திருவாரூர் திகழ்ந்து வருகிறது. இந்த மண்ணில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் சார்பில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும்.

திருவாசக நூலின் முதல் பகுதியான சிவபுராணத்தின் பொருள் உணர்த்தும் வகையில் நடனமாடி கின்னஸ் சாதனை படைப்பது பெருமைக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியதாவது:–

பிரதோ‌ஷ காலத்தில் ஆயிரம் நடன கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை சிறப்புக்குரியது. இசைக்கு மும்மூர்த்திகளாக திகழ்ந்தவர்கள் அவதரித்த ஊரில் நாட்டியாஞ்சலி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இசை, நடனம் ஆகியவற்றுக்கு திருவையாறு, திருவாரூர், சிதம்பரம் ஆகிய பகுதிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. 1,400 ஆண்டுகளுக்கு முன்பு இயல், இசை, நாடகம் குறித்து திருஞானசம்பந்தர் பாடி உள்ளார். ஆன்மிகம் என்பது இறை தொண்டாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதைத்தொடர்ந்து நடந்த 100–வது பிரதோ‌ஷ கூட்டத்தில் தேசமங்கையர்கரசி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதில் வேலுடையார் பள்ளி தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி, மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் சி.பாலமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி, ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.வி.டி.ரவிச்சந்திரன், செந்தில்நாதன், பி.ஆர்.எம்.ரவி, டாக்டர் செந்தில், தமிழ்ச்செல்வன், கிருத்திகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பின் செயலாளர் கே.ரெத்தினவேலு நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கொள்கை பரப்பு செயலாளர் ஜி.காண்டீபன் தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்