யவத்மால், துலேயில் சுற்றுப்பயணம்: வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையாக உழைத்தேன் பிரதமர் மோடி பேச்சு

யவத்மால், துலேயில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையாக உழைத்ததாக கூறினார்.

Update: 2019-02-16 23:30 GMT
மும்பை,

யவத்மால், துலேயில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையாக உழைத்ததாக கூறினார்.

சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி நேற்று யவத்மால் மற்றும் துலே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது யவத்மால் மாவட்டம் பந்தர்காவடாவில் நடந்த நிகழ்ச்சியில், பழங்குடியின மாணவர்களுக்கான ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு சாவியை வழங்கினார். தொடர்ந்து நாக்பூர் அஜ்னி- புனே ரெயில் சேவையை காணொலி காட்சி மூலமாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மராட்டிய மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்கள் சுய உதவி குழுவுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

உண்மையாக உழைத்தேன்

விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி யவத்மால் தபாதி பகுதிக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்தார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-

அன்று நாடு சந்திந்து வந்த பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தேன். மேலும் அதற்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் உண்மையாக உழைத்தேன்.

இன்று பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 1.25 கோடி விவசாய குடும்பங்களுக்கு வருடத்துக்கு ரூ. 6 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்த பணம் 3 தவணைகளாக வழங்கப்படும்.

மக்கள் 4½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வலுவான அரசு அமைய வாக்களித்தனர். அதன் காரணமாகவே தெளிவான குறிக்கோளுடன் எங்களால் அரசை நடத்த முடிந்தது.

பழங்குடியினருக்கு திட்டம்

எங்கள் வளர்ச்சி திட்டங்களை நீங்கள் பலப்படுத்துவீர்கள், உங்கள் “முதன்மை சேவகனை ” நீங்கள் ஆசிர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

மேலும் பழங்குடியினருக்கு உடனடி மருத்துவ சேவை கிடைக்கவும், அவர்கள் பகுதிகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் துலே மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். அங்கு சுல்வட் ஜம்பால் கனோலி ஏற்றநீர்ப்பாசன திட்டம் மற்றும் துலே நகர குடிநீர் வினியோக திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். அதுமட்டும் இல்லாமல் துலே-நர்தனா புதிய ரெயில்தட பணி மற்றும் ஜல்காவ்-மன்மத் 3-வது ரெயில் பாதை திட்டம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டினார். புஷ்வால்- பாந்திரா கந்தேஷ் எக்ஸ்பிரஸ் ரெயிலை காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்