சிறுபாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

சிறுபாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-16 22:30 GMT
சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை மகன் பிச்சன்(வயது 50), விவசாயி. இவர் தனது வயலில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்குகளை மாலையில் ஒரு லாரியில் ஏற்றி, அதனை சேலம் கிழங்கு ஆலைக்கு எடுத்து செல்வதற்காக புறப்பட்டார். அப்போது புறப்படுவதற்கு முன்பாக பிச்சன் லாரியின் முன்புறம் கற்பூரத்தை பற்ற வைத்து கீழே குனிந்த படி சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.

இதை கவனிக்காத டிரைவர், லாரியை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கிய பிச்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குள் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பிச்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்