காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை,
காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 40 வீரர்கள் இறந்து போனார்கள்.
இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கையில் பா.ஜ.க.வினர் தாக்குலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பின் தலைவரின் உருவப்படம் மற்றும் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுபசண்முகம், செயலாளர் உதயா, ஒன்றிய தலைவர் மழுவேந்தி, நகர் துணைத்தலைவர் பிரபாகரன், பொது செயலாளர்கள் மனோகரன், சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், கலாசார பிரிவு தலைவர் துரைராஜ், இளைஞரணி செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் பள்ளி செயலர் சேகர் தலைமையில் மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, இறந்து போன தமிழகத்தை ‘சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 துணை ராணுவ வீரர்களின் ஆன்ம சாந்தி அடைய அஞ்சலி செலுத்தினர். இதில் தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் சுப்பிரமணியன், முத்துமுருகன், வீரபத்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவ–மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.