தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஆதரவு: தேசத்துரோக வழக்கில் என்ஜினீயரிங் மாணவர் கைது
தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஆதரவு தெரிவித்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஆதரவு தெரிவித்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வீரர்கள் மரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா பகுதியில் கடந்த 14-ந் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘ஜெய்ஷ்-இ-முகமது’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
மேலும் அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி அடில் அகமது தார் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் ‘ஒரு ஆண்டுக்கு முன்பு தான் இந்த அமைப்பில் சேர்ந்தேன். எந்த நோக்கத்துக்காக அமைப்பில் சேர்ந்தேனோ, அதற்கான வாய்ப்பு தற்போது தான் கிடைத்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் வேளையில் நான் சொர்க்கத்தில் இருப்பேன்’ என்று அடில் அகமது தார் குறிப்பிட்டு இருந்தார்.
தேசத்துரோக வழக்கில் கைது
இந்த நிலையில், பயங்கரவாதி அடில் அகமது தார் பேசும் வீடியோவை பெங்களூரு கட்டிகேனஹள்ளியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படிப்பை படித்து வரும் தாகீர் லத்தீப் (வயது 23) என்பவர் தனது வாட்ஸ்-அப்பில் ‘ஸ்டேட்டஸ்’ வீடியோவாக வைத்துள்ளார். அந்த வீடியோவின் அருகே ‘மிகப்பெரிய வணக்கம் அடில் அகமது தார். சொர்க்கம் உன்னை ஏற்று கொள்ளும்’ என்பன போன்ற வாசகங்களையும் அவர் எழுதி வைத்துள்ளார்.
இதை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாகலூர் போலீசார் விரைந்து சென்று தாகீர் லத்தீப்பை கைது செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் பாகலூர் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 124-ஏ (தேசத்துரோகம்) உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்
மேலும் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில் கைதான தாகீர் லத்தீப் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுள்ளா மாவட்டம் குசால் போர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் கட்டிகேனஹள்ளியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.