நாடாளுமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு வசதி பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் பேட்டி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-16 22:30 GMT
பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

சிறப்பு வசதிகள்

பெங்களூரு மாநகராட்சி பகுதியில் 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதுபோல, பெங்களூரு புறநகர் தொகுதியில் மாநகராட்சியின் 3 வார்டுகளும், சிக்கப்பள்ளாப்பூர் தொகுதியில் மாநகராட்சியின் எலகங்கா வார்டும் உள்ளது. அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பும் மாநகராட்சிக்கு இருக்கிறது. பெங்களூரு மாநகராட்சி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான எல்லா பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, சரி பார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் வாக்காளர்் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதா?, இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலமாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். இதற்காக பஸ், ரெயில் நிலையம், பெங்களூரு ஒன் மையங்களில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெறுவதற்காக 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரே இடத்தில் ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வேறு சில நபர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்று வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூருவில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 8,515 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் கட்சிகள் சார்பில் நியமிக்கப்படும் பூத் ஏஜெண்டுகள், தங்களது கட்சியின் வேட்பாளருக்கு ஓட்டுப்போடும்படி வாக்காளர்களை வற்புறுத்துவது தெரியவந்தால், அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

10 நாட்களுக்கு முன்பாக கூட...

கடந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பேட் பற்றி வாக்காளர்களுக்கு தெரிவிக்க கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களுக்கு வி.வி.பேட் பற்றி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காக பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் 51 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பெங்களூரு மாநகராட்சியில் 36,97,211 ஆண் வாக்காளர்களும், 34,03,597 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தை சேர்ந்த 703 வாக்காளர்களும் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 71,01,561 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், தங்களது பெயர்களை சேர்க்க இன்னும் கூட வாய்ப்புள்ளது. அதாவது வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாட்கள் முன்பாக கூட வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். இதற்காக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வாக்களிப்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். அதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்களது பெயரை சேர்க்க முன்வர வேண்டும்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

மேலும் செய்திகள்