யஷ்வந்தபுரம்-தேவனஹள்ளி ‘டெமு’ ரெயில் சிக்பள்ளாப்பூர் வரை நீட்டிப்பு மத்திய மந்திரி சதானந்த கவுடா தொடங்கி வைத்தார்

பெங்களூரு யஷ்வந்தபுரம்-தேவனஹள்ளி இடையே இயங்கும் ‘டெமு’ ரெயில் சிக்பள்ளாப்பூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-02-16 23:00 GMT
பெங்களூரு, 

பெங்களூரு யஷ்வந்தபுரம்-தேவனஹள்ளி இடையே இயங்கும் ‘டெமு’ ரெயில் சிக்பள்ளாப்பூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் சேவையை மத்திய மந்திரி சதானந்த கவுடா நேற்று தொடங்கி வைத்தார்.

ரெயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து தேவனஹள்ளி இடையே ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சிக்பள்ளாப்பூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, நீட்டிப்பு செய்யப்பட்ட புதிய ரெயில் சேவையை நேற்று மத்திய மந்திரி சதானந்த கவுடா, எம்.பி.க்களான பி.சி.மோகன், கே.எச்.முனியப்பா உள்ளிட்டவர்கள் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் யஷ்வந்தபுரம் ரெயில் நிலைய புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அத்துடன், பங்காருபேட்டை-மாரிக்குப்பம், சிக்பள்ளாப்பூர்-கோலார் இடையேயான ரெயில்வே மேம்பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் சதானந்த கவுடா பேசும்போது கூறியதாவது:-

ரூ.2,047 கோடி

2014-ம் ஆண்டுக்கு பிறகு கர்நாடகத்தில் ரெயில்வே துறைக்காக மத்திய அரசு ரூ.2,047 கோடி வழங்கி உள்ளது. 4 ஆண்டுகளில் 53 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 14 ரெயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. 80 ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. 252 கிலோமீட்டருக்கு புதிதாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 301 கிலோமீட்டருக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

36 ரெயில் நிலையங்களின் கட்டிடங்கள் மேம்படுத்தும் பணியில் எலகங்கா, கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலைய கட்டிட மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.16.45 கோடியில் மேம்பாடு

இந்த விழாவில் தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அஜய் குமார் சிங் கூறுகையில், ‘யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் ரூ.16.45 கோடி ெசலவில் மேம்படுத்தப்பட உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்