ஊட்டி காந்தலில் சதுப்பு நிலத்தில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊட்டி காந்தலில் சதுப்பு நிலத்தில் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-16 22:30 GMT

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் அரசின் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு மது வாங்க வருகிறவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மதுக்கடை அருகே காசி விஸ்வநாதர் கோவில், தனியார் பள்ளி உள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பள்ளிக்கு சென்று வரும் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் மதுக்கடையை அகற்றக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் சமீபகாலமாக தினமும் மதுக்கடை திறந்த உடன், மதுபானங்களை வாங்க மதுபிரியர்கள் கூட்டமாக நிற்கின்றனர். அங்கு பார் வசதி இல்லாததால், மது பிரியர்கள் எதிரே உள்ள மேட்டில் அமர்ந்து குடிக்கின்றனர். அவர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை.

மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை தூக்கி வீசுவதால், உடைந்து அங்கும், இங்கும் சிதறுகிறது. மதுக்கடைக்கு எதிரே சதுப்பு நிலம் மற்றும் கால்வாய் ஒன்று செல்கிறது. அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பரவி கிடக்கிறது. நிலத்துக்கு வளம் சேர்க்கும் சதுப்பு நிலத்தில் இப்படி கிடப்பது மண்ணின் வளத்தை கெடுக்கிறது. மேலும் அதிக மழை பெய்யும் போது, உடைந்த பாட்டில் துண்டுகள் கால்வாயில் செல்கிறது. கால்வாய் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவர்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து காந்தலுக்கு வரும் சாலையில் மதுக்கடை உள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் போது அவர்கள் காந்தல் வழியாக ஊட்டி படகு இல்லத்துக்கு வாகனங்களில் செல்கிறார்கள். மாலை நேரங்களில் மது பிரியர்கள் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துவதால், சுற்றுலா வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பசுமையாக காணப்பட்ட அந்த இடத்தில் தற்போது மதுபாட்டில்களாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, திறந்தவெளி பாராக மதுபிரியர்கள் பயன்படுத்துவதை தடுப்பதோடு, சதுப்பு நிலத்தில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்களை அகற்றி, கால்வாய் மற்றும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்