வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.

Update: 2019-02-16 22:15 GMT
கயத்தாறு, 

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.

அமைச்சர் ஆறுதல்

வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். அவர் கடந்த மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து விட்டு, பின்னர் கடந்த 10-ந்தேதி மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றபோது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தக்க பதிலடி கொடுப்போம் என்றும், தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இறுதி அஞ்சலி

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் உடலுக்கு ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜ், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (நெல்லை மாநகர மாவட்டம்), சிவகுமார் (நெல்லை கிழக்கு), சீனிவாசன் (தூத்துக்குடி வடக்கு), பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் காமராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயக ரமேஷ், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், மாநில தலைவர் குழைக்காதர், ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் சீனிவாச கண்ணன் உள்பட திரளானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். சிவகங்கையைச் சேர்ந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை குழுவினர் உள்ளிட்ட முப்படை வீரர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்