கங்கைகொண்டான் சரணாலயத்தில் புள்ளிமான் கணக்கெடுக்கும் பணி

கங்கைகொண்டான் சரணாலயத்தில் புள்ளிமான் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

Update: 2019-02-16 22:00 GMT
நெல்லை, 

கங்கைகொண்டான் சரணாலயத்தில் புள்ளிமான் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

புள்ளிமான் சரணாலயம்

நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையையொட்டி கங்கைகொண்டானில் புள்ளிமான் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மான்கள் காணப்படுகின்றன. அந்த மான்கள் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக செல்கின்றன. அப்போது ரோட்டில் வாகனங்கள் மோதி அவ்வப்போது இறந்தும் விடுகின்றன.

இவற்றை தடுக்கவும், மான்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மான் பூங்காவை சுற்றி உடைந்து கிடக்கும் சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளை சரி செய்ய வேண்டும். மான்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கணக்கெடுக்கும் பணி

இந்த நிலையில் கங்கைகொண்டான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காணப்படும் புள்ளிமான்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

நெல்லை மாவட்ட வன அலுவலர் திருமால் தலைமையில் சூழல் மேம்பாட்டு அலுவலர் கணேசன், டாக்டர் சுகுமார், வனச்சரகர் கருப்பையா, உயிரியலாளர்கள் கந்தசாமி, ஸ்ரீதர், ராணி அண்ணா மகளிர் கல்லூரி தாவரவியல் துறை மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இவர்கள் தலா 6 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்ட மொத்தம் 12 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சரணாலயம், அபிஷேகப்பட்டியில் உள்ள கால்நடை பண்ணை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் மற்றும் காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வளாகம் மற்றும் அதை சுற்றி உள்ள காட்டுப்பகுதிகளுக்கு சென்று மான்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.

தண்ணீர் தொட்டிகள்

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் திருமால் கூறுகையில், புள்ளிமான்களின் எண்ணிக்கை பொதுவாக கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பில் நேரடியாகவே 500-க்கும் மேற்பட்ட மான்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில் வருகிற கோடை காலத்தில் புள்ளிமான்களை பாதுகாக்கும் வகையில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்