திருச்செந்தூரில் மாசித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதிஉலா நாளை மறுநாள் தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

Update: 2019-02-16 22:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

மாசித்திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

சிவப்பு சாத்தி கோலத்தில்...

காலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். சுவாமியின் பின்புறம் சிவ அம்சமாக நடராஜர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, பச்சை சாத்தி

8-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வருகிறார்.

நாளை மறுநாள், தேரோட்டம்

9-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது. 10-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

12-ம் நாளான 21-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்