ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி 24-ந் தேதி திறப்பு விஜயகுமார் எம்.பி. தகவல்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன கண் ஆஸ்பத்திரி வருகிற 24-ந் தேதி திறக்கப்பட உள்ளதாக விஜயகுமார் எம்.பி. கூறினார்.;

Update: 2019-02-15 22:15 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் விஜயகுமார் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய கண் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய கட்டிடத்தை விஜயகுமார் எம்.பி. நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் மீதிஉள்ள பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி செலவில் நவீன கண் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு புதிய பிரிவுகள் நவீனமுறையில் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கண்ணொளி திட்டத்தின்கீழ் இந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.1½ கோடி செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. லேசர் சிகிச்சை, சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஆகியவை தனித்தனியாக அமைகிறது. கண் ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளோம். அதன்படி வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள், கண் ஆஸ்பத்திரி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடக்கிறது.

மேலும் வருகிற 18-ந் தேதி நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, டி.வி.டி. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட 28 பள்ளிகளில் ரூ.22¼ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், சந்தோஷ்குமார் மற்றும் கனகராஜன், சந்தையடி பாலகிருஷ்ணன் மற்றும் அரசு டாக்டர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்