மணப்பாறை அருகே ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளில் துயரம்

மணப்பாறை அருகே ரெயில் மோதியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிறந்த நாள் கொண்டாடிய அடுத்த நாளில் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

Update: 2019-02-15 22:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், பிடாரப்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்கு, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் 2-வது மகன் இளவரசன்(வயது 11). பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது சுப்ரமணி குடும்பத்தினர் மணப்பாறை அருகே உள்ள கீழபூசாரிபட்டியில் வசித்து வருகின்றனர். இளவரசனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். பிறந்தநாள் கொண்டாடிய இளவரசன் நேற்று காலை கீழபூசாரிபட்டி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் வருவதை கண்டதும், இளவரசன் தண்டவாளத்தை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான். இருந்தாலும், அந்த இடத்தை ரெயில் வேகமாக கடந்தபோது காற்றின் வேகத்தில் அவன் உள் இழுக்கப்பட்டான். இதில் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை மற்றும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் பிறந்தநாள் கொண்டாடிய இளவரசன், அடுத்தநாள் ரெயில் மோதி இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்