கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-15 22:45 GMT
திருச்சி, 

மத்திய சங்கங்களின் அறைகூவல்படி, நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வரை 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் பி.எஸ். என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்கிட வேண்டும். பி.எஸ்.என்.எல்.-க்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்திட வேண்டும். 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும். 2-வது ஊதிய மாற்றுக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

பி.எஸ்.என்.எல். நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அதன் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள ‘அவுட் சோர்ஸிங்’ முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அனைத்து யூனியன் மற்றும் அசோசியேசன் சார்பில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

இதற்கு பி.எஸ்.என்.எல். அனைத்து யூனியன் மற்றும் அசோசியேசன் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் அஸ்லம்பாஷா, சஞ்சார் நிகாம் செயல் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சசிக்குமார் மற்றும் சுப்பிரமணியன் உள்பட பெண் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்று கைகளை கோர்த்தபடி மனிதசங்கிலியாக நின்றனர்.

போராட்டத்தின்போது பழனியப்பன் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டிலேயே தனியார் நிறுவனங்களுக்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டது. ஆனால், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு அரசே 4 ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதியை அளிக்க மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. இந்த நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு போதுமான நிதி உதவியை அளித்திட வேண்டும்.

8 அம்ச கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். 18-ந் தேதி முதல் தொடர்ச்சியாக நடக்க உள்ள 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்