பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி: கரூரில் பா.ஜ.க.- காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு, கரூரில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
கரூர்,
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில், இந்திய துணை ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில், மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் கட்சியினர் கரூர் ஜவகர் பஜார் சுபாஷ் சந்திரபோஷ் சிலையில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது தேசிய கொடியை கையில் பிடித்த படியே பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே வந்தடைந்ததும், தேசத்துக்காக உயிர்நீத்தவர்களின் புகைப்படத்தை வைத்து, அதன் மீது பூக்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் நகர தலைவர் செல்வன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே நடந்தது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, மாவட்ட துணை செயலாளர் சுரேகா பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் என கோஷம் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறந்தவர்களது உருவப்படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், குமார், சின்னையன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கரூர் பரணி பார்க் கல்வி குழும ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நேற்று வீரவணக்கம் செலுத்தினர். அப்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.