உக்கடம் மேம்பால பணிக்காக நிலம் ஆர்ஜிதம், சி.எம்.சி. காலனியிலேயே அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
உக்கடம் மேம்பால பணிக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதையொட்டி உக்கடம் சி.எம்.சி. காலனி மக்களுக்கு அந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் கூறினார்.;
கோவை,
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உக்கடம் பஸ் நிலையம் முன்பு பெரிய ரவுண்டானா கட்டப்பட உள்ளது. இதற்காக உக்கடம் சி.எம்.சி. காலனியின் ஒரு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு அந்த காலனியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சி.எம்.சி. காலனி மக்களுடன் கோவை தெற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன், குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, செயற்பொறியாளர் மணிவண்ணன், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இதில் சி.எம்.சி. காலனி மக்களுக்கு உக்கடம் பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. கூறிய தாவது:-
மேம்பால பணிக்காக ரவுண்டானா கட்டுவதற்கான இடம் ஆர்ஜிதம் செய்யப்படுவதால் மீதி உள்ள காலி இடத்தில் உக்கடம் சி.எம்.சி. காலனி மக்களுக்கு அங்கேயே அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக மீன் மார்க்கெட் உள்ள இடத்தை எடுத்து அந்த இடத்தில் வீடுகள் கட்டப்படும். மேலும் உக்கடம் சி.எம்.சி.காலனி பகுதியில் மாநகராட்சி வசம் இருக்கும் இடத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு நிலம் பரிமாற்றம் செய்யப்படும்.
தற்போது வீடுகளை காலி செய்பவர்களுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வெறைட்டி ஹால் ரோடு மைதானத்தில் அளிக்கப்படும். அங்கு கூடாரம் அமைத்து அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பள்ளி தேர்வுகள் இருப்பதால் ஏப்ரல், மாதம் வரை வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் அவகாசம் கேட்டு உள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு வீடுகளை காலி செய்யலாம். வீடுகளை காலி செய்யும் முன்பு வீடு ஒதுக்கீடு செய்து அரசு உத்திரவாத பத்திரம் உரியவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பூகம்பம் ஏற்பட்டால் கூட தாங்கும் வசதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 சதுர அடியில் மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.